உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் பைஜன் தாஸ் (வயது 55). விமானப்படை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
பைஜன் தங்கியிருந்த அறை 2 நாட்களாக திறக்கப்படாததால், ஓட்டல் ஊழியர்கள், அளித்த தகவலின் பேரில் போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது பைஜன், மின் விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அந்த அறையில் சோதனை செய்தபோது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர், 5 பக்க கடிதம் எழுதி வைத்துள்ளது தெரியவந்தது.
அந்த கடிதத்தில் பைஜன் குறிப்பிட்டு இருப்பதாவது:-
நாட்டின் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்தான் காரணம். பொருளாதார மந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம் என்று யாராலும் கூற முடியாது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்த ஊழல்கள், தவறான நிதி மேலாண்மை ஆகியவற்றால், பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு என்னால் எந்த தொழிலும் செய்ய முடியவில்லை.
தவறான நிதி மேலாண்மையின் பாதிப்பு உடனடியாக ஏற்படாது. எனவே, பொருளாதார மந்த நிலைக்கு மோடி அரசை காரணமாக குற்றம்சாட்டுவது தவறு.
பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ஏற்பட்டது தற்காலிகமான பாதிப்பு. இதற்கும், பொருளாதார மந்த நிலைக்கும் தொடர்பில்லை.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.