அரசியல்செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 18-ல் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்! ஜூலை 1-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது !

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் டி.ரத்னவேல், வி.மைத் ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், ஆர்.லட்சு மணன் ஆகிய நான்கு அதிமுக உறுப்பினர்களுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவுடைய பதவிக் காலமும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

மேலும், மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டதால், திமுக உறுப்பினர் கனிமொழி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்கெனவே ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்கள் காலியாகவுள்ளன. இதற்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

இதன்படி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் ஜூலை 1-ல் தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஜூலை 8-ம் தேதி கடைசி. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 9-ல் நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 11. வாக்குப் பதிவு தேவை இருப்பின் ஜூலை 18-இல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அதே நாளில் மாலை 5 மணிக்கு நடைபெறும். தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூலை 22-இல் நிறைவடையும்.

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர் ஒருவர் 34 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற வேண்டும். அதன்படி, பேரவையில் 123 எம்எல்ஏக்களை வைத்துள்ள அதிமுகவும், தனது எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 108 எம்எல்ஏக்களை வைத்துள்ள திமுகவும் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களை சரிபாதியாக பிரித்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று இடங்களைப் பிரித்துக் கொள்ள திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 102 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இரண்டு கட்சிகளுக்கும் தேவையான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களின் பலம் இருப்பதால் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஆறில் சரிபாதியாக தலா மூன்று இடங்களை அதிமுகவும், திமுகவும் பிரித்துக் கொள்ளும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வாக்குப் பதிவு என்பது தவிர்க்கப்படும் எனத் தெரிகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close