பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து டெல்லி வட்டாரங்கள் கூறியதாக வந்த செய்திகளாவன:
‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.
4 மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஒரு நாடு, ஒரே தேர்தல் மட்டுமல்லாது நாடாளுமன்ற செயல்பாடுகளை மேம்படுத்துவது, புதிய இந்தியாவை கட்டமைப்பது உள்ளிட்ட 5 விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆனால், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ், திமுக ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், அதிமுக சார்பில் கலந்துகொள்ள மாநில சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர்வந்தனர்.
இக் கூட்டத்தில் ‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தவிர ஏனைய முக்கிய விவகாரங்கள் குறித்தும் பேசவேண்டிய கூட்டம் என்பதால் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர்களே கலந்துகொள்ள முடியும் என்பதால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
நடைமுறை விதிகள்படி அனுமதிக்கப்படவில்லை என்றாலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்ற அதிகாரிகள் ‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ குறித்த கருத்துக்களை எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம் என்று கூறியதை அடுத்து அவர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக அவர்கள் அளித்தனர்.
பிரதமர் கூட்டிய இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தவிர அவைத்தலைவர் என்ற முறையில் மதுசூதனன் பங்கேற்க மத்திய பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோதி கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக மதுசூதனன் டெல்லி செல்ல இயலவில்லை எனவும், இதனால் பிரதமர் நடத்திய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது