செய்திகள்தமிழ் நாடு

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் முக்கிய குற்றவாளிகள் தமிழகத்தில் கைது? மதுரையில் பிடிபட்ட சதக் அப்துல்லா!

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரை வாலிபரிடம் புலனாய்வு அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். இலங்கையில் ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்து 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது..இதுதொடர்பாக தமிழகத்தில் தான் சதி திட்டம் தீட்டினார்கள் என தகவல் வந்ததை அடுத்து தமிழகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியது. கொச்சியை சேர்ந்த NIA அதிகாரிகள் கடந்த 12ம் தேதி கோவையில் முகமது அசாருதீன் (32), சதாம் உசேன் (26), அக்ரம் ஜிந்தா (26), அபுபக்கர் (29), இதயத்துல்லா (38), இப்ராஹீம் (28) ஆகியோரது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தி மொபைல் போன்கள், 29 சிம்கார்டு, 10 பென்டிரைவ், 300 ஏர் கன் புல்லட்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

பிடிபட்ட . 6 பேரும் ISIS தீவிரவாத அமைப்பில் இளைஞர்களை சேர்க்க மூளைச்சலவை செய்து, தமிழகம் மற்றும் கேரளாவில் சில இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், 6 பேருக்கும் முகமது அசாருதீன் தலைவராக செயல்பட்டதும் தெரியவந்தது. அசாருதீன் தனது முகநூலில் ISIS அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இலங்கை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகவும், மனித வெடிகுண்டாகவும் செயல்பட்ட ஜஹ்ரான் ஹாஷிம் என்பவருடன் பேஸ்புக் நண்பராக இருந்துள்ளார்., முகமது அசாருதீனை கைது செய்து, கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த 6 பேர் அளித்த தகவலின்பேரில், கோவையை சேர்ந்த முகமதுஉசேன், ஷாஜகான், ஷேக் ஷபிபுல்லா ஆகிய 3 பேரை கோவை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இவர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளையும், தீவிரவாத செயல்களையும் இளைஞர்களிடம் சமூகவலைதளங்கள் மூலமாக பரப்பி வந்ததும், கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி பா.ஜ மூத்த தலைவர் அத்வானி தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்தபோது 9 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதுபோன்று, மீண்டும் ஒரு சதிச்செயலை கோவையில் அரங்கேற்ற திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக்’ மற்றும் சிரியா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் என்பது தெரிய வரவே 3 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்களை நேற்று காலை ரேஸ்கோர்ஸ் நீதிபதி குடியிருப்பில் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 29ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அசாருதீன் உள்ளிட்ட 6 பேர் கொடுத்த தகவலின்பேரில், சதாம், ஜனோபர்
அலி, பெரோஸ்கான், முபின், உமர் பாரூக் ஆகிய 5 வாலிபர்களை தேசிய புலனாய்வு அதிகாரிகள் பிடித்தனர்.
விசாரணையில், மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சதக் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மதுரையில் இருந்த சதக் அப்துல்லாவை கைது செய்தது காவல்துறை . அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர். பின் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்றனர். இவர்கள் தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது அம்பலம் ஆகியுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close