செய்திகள்
Trending

மூன்று வருஷமா மழை இல்லை, ஆனால், தண்ணீர் பிரச்சனையும் இல்லை !! மழை நீர் சேமிப்பால் கெத்து காட்டும் 27 கிராம மக்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டாக மழையே இல்லாதபோதும், நிலத்தடி நீருக்கு பஞ்சமில்லாமல் மழை நீர் சேகரிப்பில் கிராமங்கள் அசத்துகின்றன.

வறண்ட பூமி, தண்ணியில்லா காடு, குடிநீர் தட்டுப்பாடுக்கு எடுத்துக்காட்டாக, பேசப்பட்டுவருவது, ராமநாதபுரம் மாவட்டம். தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக மழை இல்லாமல், பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு விரிசல் விரிசலாகி காட்சியளிக்க, குடிநீருக்காக குழாய்கள் முன் நாட்கணக்கில் காலி குடங்கள் கிடக்க, எதிலும் தண்ணீர் இல்லை என்று புலம்புவோர் மத்தியில், இந்த பிரச்சனையை தாங்களே யோசித்து, அதில் வெற்றிபெற்று, எதிர்மறையான எண்ணத்தை மாற்றிக்காட்டிய கிராமங்களும் இம்மாவட்டத்தில் இருக்கத்தான் செய்கிறது.

முறையாக திட்டமிட்டு மழை நீரை சேகரித்து, தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளது இராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள, அம்மன் கோவில், பழங்குளம், இடைதாங்கி, பேராவூர், இளமனூர், மாடக்கோட்டான், வழுதூர் உள்ளிட்ட 27 கிராமங்கள். யாரையும் உதவிக்கு அழைக்காமலும், உதவியை எதிர்பார்க்காமலும், தங்களாகவே, கண்மாய்கள், ஊரணிகளைச்சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாத வகையிலும், நீர்வழித்தடங்களை முறையாக சீரமைத்தும், ஆண்டுக்கொருமுறை தூர்வாரியும், பாதுகாக்கின்றனர்.

கிராமத்தின் பிற பகுதிகளில் தேங்கிய மழை நீரையும், வயல்களில் கிடைக்கும் உபரிநீரையும், வாய்க்கால் அமைத்து ஊரணிக்குள் விடுகிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் பம்ப் செட்டுகள் மூலமாகவும் ஊரணிக்குள் தண்ணீர் அனுப்பப்படுகிறது. கரையோரங்களில் வேம்பு மற்றும் பனை மரங்களை நட்டு, நீர் ஆவியாவது தடுக்கப்படுவதுடன், கரையிலுள்ள மண்ணரிப்பும் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் கிடைக்கும் நீர், குடிநீருக்கு மட்டுமல்லாது, கால்நடைகள் பயன்பாட்டுக்கும்,போதுமானதாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

மழை நீரின் அவசியம் உணர்ந்து அவற்றை சேகரிக்கவேண்டிய கட்டாயத்திற்கு இன்றைய மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த கிராமங்கள் அனைவருக்கும் உதாரணமாக திகழ்வதாக பாராட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் இந்த கிராம மக்களை முன்னுதாரணமாக கொண்டு தங்கள் பகுதி நீர் நிலைகளில்,மழை நீரை சேமிக்க முன்வந்தால், குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close