செய்திகள்தமிழ் நாடு

இலங்கை குண்டு வெடிப்பு சென்னையில் முஸ்லீம் தீவிரவாதிகள் கைது! இந்தியாவில் சதி வேலைகளில் ஈடுபட திட்டம்!

தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள், நேற்று சென்னை, நாகையில் அதிரடியில் இறங்கினர் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். துபாயில் கிடைத்த துப்பு அடிப்படையில், பயங்கரவாத தொடர்புகளை கண்டறிய, ரகசிய வேட்டையில் களமிறங்கினர் தேசிய புலனாய்வு அமைப்பு.

சோதனையில் சிக்கியவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், இந்தியாவில் சதி வேலைகளில் ஈடுபட, சர்வதேச பயங்கரவாத இயக்கம் திட்டமிட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இலங்கையில், ஏப்ரல், 21ல், ஈஸ்டர் தினத்தன்று, தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ.,என்ற, இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள், இலங்கை சென்று, விசாரணை நடத்தினர்.

அப்போது, குண்டு வெடிப்புக்கு காரணமான நபர்களுடன், தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தோர், சமூக வலைதளங்கள் வாயிலாக, தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நபர்களின் தகவல்களை சேகரித்த, என்.ஐ.ஏ., அதிகாரிகள், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஜூன் மாதத்தில், கோவையில் நடத்தப்பட்ட சோதனையில், இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பண பரிவர்த்தனை மற்றும் மூளை சலவை செய்தவர்கள் பற்றிய தகவல் கிடைத்தது. அந்த கும்பல், தடை செய்யப்பட்ட அமைப்பின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களில் செயல்படுவதாகவும் தெரிய வந்தது.

இந்நிலையில், ‘வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்’ என்ற அமைப்பு, ஆறு மாதங்களுக்கு முன், துவங்கப்பட்டது. இந்த அமைப்பு, சென்னை, மண்ணடி, லிங்கி செட்டி தெருவில் உள்ள, ரஹமத்துல்லா என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்படுகிறது. இந்த அமைப்பின் வாயிலாகவே, பண பரிவர்த்தனை, கோவை வழியாக இலங்கைக்கு சென்றது, என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்தது.மேலும், அந்த அமைப்பிற்கும், ஐ.எஸ்., மற்றும் அல்குவைதா பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாகவும், ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னையில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில், கொச்சியில் இருந்து, சென்னை வந்த என்.ஐ.ஏ., – எஸ்.பி., ராகுல் தலைமையில், 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நேற்று காலை, 7:00 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.அதேபோல, வேப்பேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை யில் உள்ள, அந்த அமைப்பின் தலைவர், சையது புகாரின் வீட்டிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனை, மாலை, 3:00 மணி வரை நீடித்தது. சோதனையில், அலுவலகம் மற்றும் வீட்டில், பண பரிவர்த்தனைக்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதில், கேரளாவில் செயல்படும், பழமைவாத அமைப்புக்கும், வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த அமைப்பின் தலைவர் சையது புகாரியை, விசாரணைக்கு, கிண்டியில் என்.ஐ.ஏ., அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும், அமைப்பின், மாநில செயலர் உஸ்மான், அமைப்பின் நிர்வாகி இஸ்மாயில் ஆகியோர், என்.ஐ.ஏ., அலுவலகத்தில் ஆஜராக, ‘சம்மன்’ அனுப்பப்பட்டது.
மாலையில் ஆஜரான அவர்களிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள், விசாரணை நடத்தினர். அதேபோல, நாகப்பட்டினம், மஞ்சக்கொல்லை, பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது யூசுப்தீன் ஹரீஸ் முகமத், ஹசன் அலி யூனுஸ் மரைக்காயர் ஆகியோரின் வீடுகளில், என்.ஐ.ஏ., – ஏ.டி.எஸ்.பி., சவுகத் அலி, டி.எஸ்.பி., சாகுல் ஹமீது தலைமையிலான அதிகாரிகள், நேற்று சோதனையில் ஈடுபட்டனர். பொரவாச் சேரியில் உள்ள, குர்கான் உதீன் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

இதில், முகமது யூசுப்தீன் ஹரீஸ் முகமத், வெளிநாட்டில் தங்கியிருப்பதை அடுத்து, அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப் பட்டது. ஹசன் அலி யூனுஸ் மரைக்காயர் வீட்டில் இருந்து, ‘பென்டிரைவ், லேப்டாப்’ மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். ஹசன் அலிக்கு, பயங்கரவாத இயக்கங்களுடன்
தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதால், அவரை, நாகை, எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், சர்வதேச பயங்கரவாத இயக்கமான,ஐ.எஸ்.,சுக்குஆதரவாக செயல்பட்ட தாக, துபாயில் கைது செய்யப்பட்ட தமிழக இளைஞர்கள், 15 பேரின் பின்னணி குறித்தும், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும், 100 இளைஞர்கள், என்.ஐ.ஏ. வின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

எட்டு மணி நேர சோதனைக்கு பின், சென்னையை சேர்ந்த சையது புகாரி, நாகையை சேர்ந்த, முகமது யூசுப்தீன் ஹரீஸ் முகமத், ஹசன் அலி யூனுஸ் மரைக்காயர் ஆகிய மூவர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close