ஆன்மிகம்செய்திகள்
Trending

அத்தி வரதரை தரிசனம் செய்ய 10 கி.மீ வரிசை : குடிநீர் இல்லாமல் வெயிலில் தவிக்கும் பக்தர்கள் – மோசமான ஏற்பாடுகளை செய்துள்ளதா தமிழக அரசு ? #AthiVaradhar

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் அத்தி வரதர் வைபவத்தில் பங்குபெற்று அத்தி வரதரை தரிசனம் செய்ய கடலென பக்தர்கள் காஞ்சியில் தினமும் குவிந்து வருகின்றனர்.

அத்திவரதர் உற்சவத்தின் 13ஆம் நாளான இன்று பச்சை பட்டு உடுத்தி மலர் மாலை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சனிக்கிழமை ஏகாதசி பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிட்டத்திட்ட இரண்டு லட்சம் பக்தர்கள், காஞ்சிபுரத்தில் இன்று குவிந்தனர் என்றும் கோவிலில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்த பின்னரே சாமியை தரிசிக்க முடிந்தது. வரிசையில் காத்திருக்கும் போது, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் வெயிலில் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்ற புகார்கள் எழுந்துள்ளன.

வைபவத்தின் முதல் நாள் துவங்கி தமிழக அரசு செய்து வரும் ஏற்பாடுகளை பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

பெங்களூரை சேர்ந்த பக்தர் ஒருவர் பதிவிடுகையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டது என்று குற்றம் சாட்டிய அவர், மக்கள் அவதிபடுவதை காவல்துறை வேடிக்கை மட்டும் பாரத்தது என்று கூறியுள்ளார்.

வெய்யிலில் பக்தர்கள் அவதிப்படும் புகைப்படத்தை ட்விட்டர் வாசிகள் பகிர்ந்துள்ளனர்.

அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் வி.ஐ.பி வரிசையில் செல்வதால் பொது மக்கள் அவதிப்படுவது யாருக்கும் தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார் மற்றுமொரு ட்விட்டர் வாசி.

கூட்ட நெரிசலில் மூச்சு விடும் அளவிற்கு கூட இடம் இல்லாத அளவிற்கு பக்தர்களை அவதிக்குள்ளாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வளம்வருகிறது.

அக்கம் பக்கம் திரும்ப முடியாத அளவிற்கு சாலைகள் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகிதான் அத்தி வரதரை தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மின்விசிறி இல்லாமல் வெயிலில் அவதிப்படும் பக்தர்களுக்காக பெரிய அட்டையை வைத்துக்கொண்டு விசிரியாக பயன்படுத்தி பக்தர்களுக்கு காற்றை வரவைக்கும் முயற்சியில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி அரசு தலைமையில் கும்ப மேளா நடந்தது. உலகமே வியக்கும் வகையில் கோடான கோடி பக்தர்களை மிகவும் அற்புதமாக சமாளித்து, தூய்மையை காத்து சர்வதேச நாடுகளின் பாராட்டுகளையும் பெற்றது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்களை சமாளித்து வருகிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம். இவர்களின் அறிவுரையையெல்லாம் பெற்று தமிழக அரசு, அத்தி வரதர் வைபவத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

வி.ஐ.பி கலாச்சாரத்தை பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்பட பெரும்பாலான அதிகாரிகளும் விட்டுள்ள நிலையில், திராவிட அரசியல் 60 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வரும் தமிழகத்தில், எதிர்க்கட்சி தலைவரின் மனைவி துவங்கி, எம்.பி-க்களின் குடும்பம், நடிகர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் வரை வி.ஐ.பி பாஸ் பெற்று சொகுசாக அத்தி வரதரை தரிசனம் செய்யும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. வெயிலில் காற்று, குடி தண்ணீர் இல்லாமல் துயரப்படும் நிலையில் தான் அப்பாவி தமிழ் ஹிந்துக்கள் இருக்கிறார்கள். ஹிந்துக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று கூறும் பாஜக, ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் பக்தர்கள் படும் அவதியை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை.

பக்தர்கள் அவதி படாமல், முதியவர்கள் துவங்கி சிறுவர்கள் வரை அனைவரும் நிம்மதியாக அத்தி வரதரை தரிசனம் செய்யும் நிலை ஏற்பட தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தமிழ் ஹிந்துக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close