Loading...
செய்திகள்

இதுவரை 4 கோடி பயனாளிகளுக்கு இ-சுகாதார அட்டை வழங்கப்பட்டுள்ளது : ஏழைகளின் உயிர் காக்கும் ஆயுஷ்மான் பாரத்

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆயுஷ்மான் பாரத் பெருந்திட்டத்தின் ஒரு கூறாக பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத் திட்டத்தின்கீழ், இதுவரை சுமார் 4 கோடி பயனாளிகளுக்கு இ-சுகாதார அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும், சுமார் 32 லட்சம் பயனாளிகள் நாடுமுழுவதும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்றுள்ளனர் என்றும் பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு ஏ, மாரியப்பன் கூறினார்.

புதுச்சேரியில் உள்ள மக்கள் தொடர்பு கள அலுவலகமும், சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 15-ன் பொது சுகாதாரப் பிரிவும் இணைந்து இன்று (11. 07. 2019) ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்திய “ஆயுஷ்மான் பாரத் – உலக மக்கள் தொகை” சிறப்பு விழிப்புணர்வு முகாமில் சிறப்புரை ஆற்றிய போது திரு மாரியப்பன் இவ்வாறு தெரிவித்தார்.

தகுதியுள்ள குடும்பத்தினர் அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து மருத்துவ வசதிகளைப் பெறலாம் என்று அவர் கூறினார்.

ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் அளவான குடும்பம்தான் அடிப்படையாகும்.  ஒன்று, இரண்டு குழந்தைகளோடு குடும்பத்தைக் கட்டுப்படுத்தி பாரம்பரிய உணவு முறையைக் கடைபிடித்தால் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் உறுதி.

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகளை மக்களும், மாணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், இளம் வயதிலேயே தன் குடும்பத்தின் அளவை ஒவ்வொருவரும் மனதுக்குள் வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  

நிகழ்ச்சிக்கு மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் ம. கார்த்திகேயன் தலைமை வகித்தார்.  இனப்பெருக்க உரிமைகள் என்பதும் மனித உரிமைகள்தான்.  எனவே, மாணவ-மாணவியர்கள் இனப்பெருக்க உரிமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என டாக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் முனைவர் திரு. தி.சிவக்குமார், துவக்கவுரையாற்றினார்.  இந்தியாவின் மக்கள் தொகை 2011-ன் கணக்கெடுப்பின்படி, 121 கோடி ஆகும்.  இப்போது சுமார் 137 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழ்நாடு மக்கள் தொகை 7.21 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது.  அளவான குடும்பமே அழகான குடும்பம் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இயக்குனர் தெரிவித்தார்.

மண்டல செயற்பொறியாளர் திரு டி. பத்மநாபன், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் திரு வேல்முருகன், கண்ணகி நகர் நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நெ. அனிதா, பள்ளித் தலைமையாசிரியர் திரு. கு.முத்துக்கருப்பன், முன்னாள் கவுன்சிலர் திரு டி சி கருணா ஆகியோரும்        நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாணவ மாணவியரின் விழிப்புணர்வு ஊர்வலத்தை கூடுதல் தலைமை இயக்குனர் திரு மாரியப்பன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

மக்கள் தொடர்பு கள உதவியாளர் திரு மு. தியாகராஜன் வரவேற்புரையாற்றினார்.  வார்டு 195 உதவிப் பொறியாளர் திரு து. மதியழகன் நன்றி கூறினார்.

இந்திய அரசில் பதிவு பெற்ற கூடுவாஞ்சேரி ஸ்ரீ அபிநயா கலை மன்றத்தினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close