Loading...
செய்திகள்

ஜோலார் பேட்டையிலிருந்து ரயில் மூலம் ஓடி வரும் காவிரி நீர் : நாளை சென்னை வந்தடைகிறது! துரிதமாக செயல்பட்ட தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு !!

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் வேகன்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது.

இதன்படி, வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து ஜோலார்பேட்டை மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் 5.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்ப திட்டமிட்டனர்.

இதன் மூலம் தினமும் 10 மில்லியன் லிட்டர் (1 கோடி லிட்டர்) குடிநீர் வேகன்களில் சென்னைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதற்கான பணிகள் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி இரவு பகலாக நடந்தது. நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 55 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 ரெயில்வே வேகன்கள் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை வந்தடைந்தது.

இந்த வேகன்கள் சுத்தம் செய்யப்பட்டு பலத்த ஆய்வுக்கு பின்னர் குடிநீர் கொண்டு செல்ல தகுதியாக்கப்பட்டு ஒவ்வொரு வேகனிலும் “வாட்டர் டேங்க்” என எழுதப்பட்டுள்ளது.

இதற்கு ஒரு தடவைக்கு ரூ.8.6 லட்சம் ரூபாய் ரெயில்வே துறைக்கு தமிழக அரசு கட்டணமாக செலுத்துகிறது. சராசரியாக ஒரு லிட்டருக்கு 34 பைசா செலுத்தப்படுகிறது.

ஜோலார்பேட்டையில் நீர் ஏற்றும் இடமான பார்சம்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்தில் உள்ள வடக்கு ஜகநாத் வரை சுமார் 204 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இந்த தூரத்தை கடக்க 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆகும்.

50 ரெயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்படும். இதற்காக குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் 4-வது யார்டில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் இந்த திட்டம் 6 மாதம் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 20 நாட்களில் இப்பணியை போர்கால அடிப்படையில் மேற்கொண்ட தமிழக அரசுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close