அரசியல்செய்திகள்

“காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 மத்திய அமைச்சர்கள் செய்யாததை நிர்மலா சீதாராமன் செய்துள்ளார்” – வானதி சீனிவாசன் அதிரடி!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருத முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியிருந்தார். இதற்கு தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நக்கீரன் இதழின் நேர்காணலில் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியதாவது : –

நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு கடந்த பாஜக ஆட்சியில் என்னென்ன பணிகளை செய்திருக்கிறார் என்பதை என்னால் பட்டியலிட முடியும். கடந்த யுபிஏ ஒன்று மற்றும் இரண்டு காலக்கட்டத்தில் தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் என்னவெல்லாம் செய்ய இயலவில்லையோ, என்னவெல்லாம் செய்யாமல் விட்டார்களோ, அதைவிட ஒரு பங்கு அதிகமாக நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு செய்திருக்கிறார். 

உத்திரப்பிரதேசத்தில் அமைய இருந்த டிவென்ஸ் காரிடார் போலவே தமிழகத்திற்கும் அவர் கொண்டு வந்தார். திருப்பூர் சாயப்பட்டரை பிரச்சனை என்பது 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பிரச்சனை. ஒவ்வொரு முறை தமிழகத்தின் முதல் அமைச்சர்கள் பிரதமரை சந்திக்கும்போதும் பேசியிருந்த பிரச்சனை. அதை நிதி ஆயோக் வாயிலாக பெரும் உதவி செய்து அந்த தொகையை தமிழகத்திற்கு வாங்கிக்கொடுத்தவர். 

திருச்சியிலே பிஎச்இஎல் நிறுவனம் அதனுடைய ஆர்டர்களை வெளிமாநிலங்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் அவற்றையெல்லாம் திருச்சியில் இருக்கக்கூடிய துணை நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெறுகின்ற வகையில் அந்த துறை மந்திரியை பார்த்துப் பேசியவர். பேசி அதற்கான தீர்வையும் கண்டவர்.  

ஓக்கி புயலின் போது சம்மந்தப்பட்ட கன்னியாகுமரி எம்பியுடம், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வெளிநாடு அரசுமுறைப் பயணமாக இருந்தபோது, அந்த புயல் பாதித்த மீனவர்களோடு இருந்து, அவர்களின் துன்பத்தை அறிந்து அவர்களுக்கான உதவிகளை செய்து, மீனவர்களை தேடும் பணிகளை செய்தவர். பாதுகாப்புதுறையை ஈடுபட வைத்து அந்த மக்களுக்கு துணை நின்றவர். 

கஜா புயலின்போது தமிழகத்திற்கு அவர் வந்து சென்ற நான்கு மணி நேரத்தில் தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க வைத்து, பெட்ரோலிய நிறுவனங்கள் வாயிலாக, சிஎஸ்ஆர் நிதியின் வாயிலாக உடனடியான உதவிகளுக்கும் ஏற்பாடு செய்தவர். மத்திய விவசாயத்துறை அமைச்சரை எங்களுடன் சேர்ந்து சந்தித்து தென்னை விவசாயிகளுக்கு தென்னை வாரியத்தின் வாயிலாக உதவிகளை பெற்றுத்தந்தவர். குரங்கனி தீ விபத்தில் உடனடியாக உதவி செய்தவர். 

திருப்பூரில் சிறு தொழிலில் ஈடுபடும் பட்டன் தைப்பவர்கள், காஜா எடுப்பவர்களுக்கு அரசாங்கத்தில் ஒரு பாலிசியை மாற்றி இறக்குமதி செய்யக்கூடிய பொருள்களின் ஒட்டுமொத்த பலனை அனுபவிக்குமாறு செய்தவர். திண்டுக்கல், திருச்சி பகுதிகளில் இயற்கை முறையில் தோலை பதப்படுத்தக்கூடிய தொழிலில் இருக்கக்கூடிய நபர்களுக்காக கடுக்காய் வாயிலாக தோலை பதப்படுத்தும் தொழிலுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தந்தவர். 

தென்னை விவசாயிகளுடைய நலனுக்காக ரயில்வேக்கள் மூலம் தேங்காய், இளநீர் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்காக ரயில்வே அமைச்சரிடம் பேசி அதற்கு அனுமதி பெற்றுத்தந்தவர். கோவை – பெங்களூரு நேரடி ரயில் சேவை என்பது இருபது ஆண்டுகால கோவை மக்களின் எதிர்பார்ப்பு, அதனை அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் பியூஸ் கோயலிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்தார். 

கோவையில் சிறு குறு தொழில்கள் அதிகமாக உள்ள பகுதியில் கொடிசியா என்கின்ற அவர்களுடைய அமைப்புக்கு 20 கோடி ரூபாய் நிதி வழங்கி, பாதுகாப்புத்துறைக்கு அவர்கள் என்னென்னவெல்லாம் உபகரணங்கள் செய்ய முடியுமோ, அவற்றிற்கெல்லாம் செய்வதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தவர். defence innovation hub ஏற்படுத்திக்கொடுத்தவர். இந்தியாவிலேயே ஒரே ஒரு hub முதல் முறையாக வழங்கப்பட்டிருப்பது கோவையினுடைய கொடிசியாவிற்கு. இன்னும் நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 

இத்தனை விஷயங்களை தமிழத்திற்கு செய்தவரை தமிழர் இல்லை என்று கே.எஸ். அழகிரி சொல்ல முடியும் என்றால், தமிழர்களாக இவர்கள் இருந்து தமிழகத்திற்கு செய்தது என்ன என்று அவர் அறிக்கை கொடுக்கட்டும். தமிழர்களாக இருந்து எய்ம்ஸ் கொண்டு வந்தார்களா? தமிழர்களாக இருந்து இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார்களா? இவர்கள் தமிழர்களாக இருந்து இந்திய, தமிழக மீனவர்களை காப்பாற்றினார்களா? என்று கே.எஸ்.அழகிரி சொல்ல வேண்டும். 

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close