தமிழ் நாடு

முதலாளியான முன்னாள் சிறைக்கைதி – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் நொடியில் மாறிய வாழ்க்கை..!

தூத்துக்குடியில் முன்னாள் சிறைவாசி ஒருவர் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் மையம் அமைப்பதற்கு கடனுதவி கேட்டு, அதை வங்கிகள் நிராகரித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ரூபாய் 1 லட்சம் நிதியுதவி வழங்கி தொழில் தொடங்க உதவி செய்த மனிதநேய நிகழ்வு அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தூத்துக்குடி மேலவெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் வேதமணி. வயது 57. இவர் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி தண்டனை பெற்று கடந்த 17 வருடங்களாக சிறைவாசியாக இருந்து வந்தார். தண்டனை காலம் நிறைவுபெற்றதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு விடுதலையானார்.

விடுதலையான சில வாரங்களுக்கு பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாழ்வாதாரத்துக்காக எலக்ட்ரிக்கல் சர்வீஸ் மையம் தொடங்க 1 லட்சம் கடனுதவி கேட்டு மனு அளித்தார். மனுவை பரிசீலித்த அதிகாரிகள் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (பி.எம்.இ.ஜி.பி.) விண்ணப்பிக்குமாறு பதில் அளித்திருந்தனர். சில வாரங்கள் கழித்து அவர் மீண்டும் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் முகாமில் அதே கோரிக்கையுடன் மனு அளித்தார். இவரது கடன் விண்ணப்பத்தை பற்றி விசாரித்த போது இவரது கடந்த கால பிண்ணனி காரணமாக வங்கி அதிகாரிகள் கடனுதவி விண்ணப்பத்தை நிராகரித்தது தெரியவந்தது.
சுயதொழில் செய்து கண்ணியமாக வாழ வேண்டும் என்கிற அவரது மன உறுதியை அறிந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேதமணியின் நிலை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உதவி ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி, முதுமை மற்றும் உடல் பலவீனம் காரணமாக வேதமணி எந்தவொரு உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்ய முடியாதவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் இல்லாதவர். அவர் சிறைவாசியாக ஆவதற்கு முன்பு எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார் என அறிக்கை சமர்ப்பித்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆட்சியரின் விருப்ப நிதியின் கீழ் ரூபாய் 1லட்சம் நிதியுதவி வழங்கி தொழில் தொடங்க ஆவண செய்தார். நிதியை பெற்றுகொண்ட வேதமணி கடந்த 16ஆம் தேதியன்று மேலவெள்ளமடம் பகுதியில் மணி எலக்ட்ரிக்கல் சர்வீஸ் மையம் எனும் பெயரில் கடையை திறந்து, வீட்டு உபயோக எலக்ட்ரிக் பொருள்கள் பழுது நீக்கி தரும் தொழிலை தொடங்கினார்.

இதனை தொடர்ந்து அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மின்சார உபயோக பொருள்களை வைப்பதற்கு ஏதுவாக அலமாரிகள், மேஜைகளை நன்கொடையாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேதமணியின் எலக்ட்ரிக்கல் கடைக்கு நேரில் சென்று பார்வையிட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம், வாழ்வாதாரம் இன்றி தவித்த தனக்கு உயர்ந்த உள்ளத்துடன் உதவிக்கரம் செய்தமைக்கு மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார் வேதமணி.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் மனிதநேய அனுகுமுறையால் ஒரு முன்னாள் சிறைவாசியின் நிகழ்கால வாழ்க்கை அமைதியாகவும் ஆத்மார்த்தமாகவும் நகரும் என்பதோடு, ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் இந்த மனிதாபிமான செயல் அனைவராலும் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close