செய்திகள்

கோவை தொழிலதிபர்களின் அடுக்கடுக்கான கோரிக்கைகள் : நிறைவேற்றுவார்களா கம்யூனிஸ்டுகள் ?

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தொடரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், கோவை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடராஜனுக்கும், கோவை தொழில் துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.


ராமமூர்த்தி, தலைவர், கொடிசியா: கோவையில் இயங்கி வரும் பல்வேறு தொழில் துறையினரின் தேவைகளை அறிந்து, அவற்றை பார்லிமென்டில் எடுத்துரைத்து, தொழில் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். விமான நிலைய விரிவாக்கம், மாநகரின் கட்டமைப்பு வசதிகள், புதிய ரயில் சேவைகள் ஆகியவற்றை நிறைவேற்றி, நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்திய ஜவுளி தொழில்முனைவோர் கூட்டமைப்பின் (ஐ.டி.எப்.,) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன்: இந்த ஸ்திரமான பெரும்பான்மையின் மூலம், துணிவான பொருளாதார கொள்கை மாற்றங்களை கொண்டுவர இயலும். தமிழக லோக்சபா உறுப்பினர்கள், குறிப்பாக கொங்கு மண்டல எம்.பி.,க்கள், இப்பகுதியின் தேவைகளை அறிந்து, இப்பகுதியின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்ட நிலைக்கு எடுத்து செல்ல உதவ வேண்டும்.

கோவை கம்ப்ரசர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் (கோசியா) தலைவர் ரவீந்திரன்: தமிழகத்தில் ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை புரிந்து கொண்டு அவற்றை நீக்கி, சிறு தொழில்களுக்கு ஏதுவான சூழலை மீண்டும் கொண்டு வந்து, நல்லாட்சி தர வேண்டும்.

கோவை மாவட்ட கிரில் உற்பத்தியாளர் நல சங்க நிறுவன தலைவர் திருமலை ரவி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடராஜன், கோவை தொழில் சார்ந்த பிரச்னைகளை, பார்லிமென்டில் எடுத்துரைத்து, உரிய தீர்வு காண வேண்டும். ஜி.எஸ்.டி., வரிகளை குறைக்க முயற்சி எடுப்பதாக, தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை போல், கிரில் தொழிலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை ஐந்து சதவீதமாக குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

பொதுவாக தொழிலதிபர்களின் எதிரியாக கருதப்படும் கம்யூனிஸ்டுகள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவார்களா என்ற கேள்வி தொழிலதிபர்கள், மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர்கள் இடையே எழுந்துள்ளது. திருப்பூர், கோவை ஆகிய இரண்டு தொகுதிகளும் கம்யூனிஸ்டுகள் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close