செய்திகள்

தமிழக அரசின் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ₹2,000 சிறப்பு உதவித்தொகை: பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

தமிழக அரசு அறிவித்துள்ள அடிப்படை வருமானத் திட்டம் என்பது தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ₹2,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.

தமிழக அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவியாகும். கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் வறட்சி நிலவுவதால் அங்கும் இதே நிலை தான் காணப்படுகிறது. மற்றொருபுறம் சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இன்றுடன் 103 நாட்களாகிவிட்ட நிலையில், அவர்களுக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பொதுவாக இத்தகைய பாதிப்புகளின் தாக்கம் மற்ற துறைகளையும் பாதித்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஏதேனும் உதவி வழங்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள ₹2,000 நிதியுதவி ஏழைக்குடும்பங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close