இந்தியா

ரூ, 60,000 கோடி செலவில் கோதாவரி ஆற்று நீரை பெண்ணை – காவிரிக்கு கொண்டு வரும் மகத்தான திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

ஆந்திர மாநிலம், அமராவதியில் நேற்று, மத்திய நீர் வளத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி கூறியதாவது: தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி – காவிரி ஆறுகளை இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற, 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றிலிருந்து, 1,100 டி.எம்.சி., நீர், வீணாக கடலில் கலக்கிறது.

கோதாவரி – காவிரி ஆறுகளை இணைப்பதால், இந்த நீரை, நான்கு தென் மாநிலங்களிலும் பயன்படுத்த முடியும். இதற்காக, கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணார் – காவிரி ஆறுகளை இணைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக, இந்த அறிக்கை விரைவில் அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி, உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் திரட்டப்படும்.

இந்த திட்டம் நிறைவேறினால், நாட்டின் கடைக்கோடி மாநிலமான தமிழகம் வரை, கோதாவரி நீர் சென்றடையும். இதன் மூலம், தண்ணீர் தொடர்பாக, மாநிலங்கள் இடையில் நிலவும் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு காணப்படும். கோதாவரி – காவிரி ஆறுகளை, கால்வாய்கள் மூலம் இணைக்க வேண்டாம் என, முடிவு செய்துள்ளோம். அவ்வாறு செய்வதால், நீர் ஆவியாகிறது. மாறாக, சிறப்பு தொழில் நுட்பம் மூலம் வலுவூட்டப்பட்ட, குறைந்த அடர்த்தி உடைய இரும்புக் குழாய்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனால், திட்ட செலவு கணிசமாக குறையும். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close