இந்தியா

உலக அளவில் அதி நவீன ஏவுகணைகள் வாங்குவது உள்பட 8 ஒப்பந்தங்கள் : இந்தியா ரஷ்யா இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் பற்றிய முழு விவரம்

இந்தியா ரஷ்யா இடையேயான 19 வது ஆண்டு இருதரப்பு உச்சி மாநாடு அக்டோபர் 4 மற்றும் அக்டோபர் 5, 2018 ஆகிய இரு நாட்களுக்கு புது டில்லியில் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்க, ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

தலைநகர் டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி இருவரும் (5 அக்டோபர் 2018) இன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பை தொடர்ந்து ஐந்து எஸ் 400 ரக ஏவுகணைகள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், விண்வெளியில் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் இந்திய கண்காணிப்பு மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கையெழுத்தான 8 ஒப்பந்தங்கள்

1) 2019-2023 காலகட்டங்களில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இடையேயான ஆலோசனைகளுக்கான நெறிமுறை தொடர்பான ஒப்பந்தத்தில் ரஷ்யா சார்பாக

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. செர்கே லாவ்ரோவ் மற்றும் இந்தியா சார்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், திருமதி. சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

2) ரஷ்ய பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் மற்றும் இந்தியாவின் மாறுதலுக்கான தேசிய நிறுவனம் (நித்தி  ஆயோக்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷ்ய பொருளாதார வளர்ச்சி அமைச்சர் திரு. மாக்சிம் ஒரேஷ்கின் மற்றும் நித்தி ஆயோக் துணைத் தலைவர், டாக்டர். ராஜிவ் குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

3) மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்  திட்டத்திற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும்  ரஷ்ய விண்வெளித் துறை (ரோஸ்காஸ்மோஸ்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரோஸ்காஸ்மோஸ் இயக்குனர் திரு. டிமிட்ரி ரோகோஸின் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை செயலர் திரு. விஜய் கோக்லே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

4) இந்தியா மற்றும் ரஷ்ய ரயில்வே துறை இடையே ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தில் ரஷியன் ரயில்வேயின் ரயில்வே கூட்டு பங்கு நிறுவன தலைவர் திரு. ஒலெக் பெலோசெரோவ் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை செயலர் திரு. விஜய் கோக்லே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

5) அணு துறையில் உள்ள ஒத்துழைப்பை முன்னுரிமை படுத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்தளுக்கான செயல் திட்டத்தில் ரோசடோம் தலைமை இயக்குனர், திரு. அலெக்ஸி லீகாசேவ் மற்றும் இந்திய அணு சக்தி துறை செயலர் திரு. கே. என். வியஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

6) போக்குவரத்து கல்வியில் மேம்பாட்டு ஒத்துழைப்பு குறித்து ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வே துறை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் திரு. நிக்கோலே குடஷேவ் மற்றும் ரஷ்யாவிற்கான இந்திய தூதர் திரு. டி. பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

7) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான ஒத்துழைப்பு குறித்து இந்தியாவின் தேசிய சிறு தொழில்கள் கழகம் மற்றும் ரஷ்யாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் கழக தலைமை இயக்குனர், திரு. அலெக்சாண்டர் பிரேவர்மன் மற்றும் ரஷ்யாவிற்கான இந்திய தூதர் திரு. டி. பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

8) உரத்துறையில்  ரஷியன் நேரடி முதலீட்டு நிதியம்; பொது கூட்டு பங்கு நிறுவனம், போஸ்ஆக்ரோ மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ரஷியன் நேரடி முதலீட்டு நிதியம் தலைமை இயக்குனர் திரு. கிரில் டிமித்ரேவ், போஸ்ஆக்ரோ தலைமை செயல் அதிகாரி திரு. அண்ட்ரே குர்யேவ் மற்றும் ரஷ்யாவிற்கான இந்திய தூதர் திரு. டி. பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பிரதமர் மோடி கூறியது

பின்னர் இரு நாட்டு தலைவர்களும் பத்திரிக்கையாளர்களை கூட்டாக சந்தித்தனர்

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யாவிற்கு பெரும் பங்கு உள்ளது. இரு நாடுகளும் சிறப்பான உறவை பேணி காத்து வருகின்றது. இரு நாடுகளுக்கு இடையில் 8 ஒப்பந்தங்கள் தற்போது கையெழுத்து ஆகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இருநாட்டு உறவு மேலும் வலுப்பெறும். தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ள நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்”, என்று கூறினார்

ரஷ்ய அதிபர் புடின் கூறியது

ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், “ரஷ்யாவின் நீண்ட கால நட்பு நாடக இந்தியா உள்ளது. விண்வெளிக்கு ஆட்களை அனுப்ப இந்தியாவிற்கு ரஷ்யா உதவி செய்யும். அமைதியை எட்டுவதற்காக நீண்ட கால நட்பு நாடாக இரு நாடுகளும் உள்ளன. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் ஆலோசனை செய்யப்பட்டது. உறவை இன்னும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது”, என்று கூறினார்.

உலக அளவில் அதி நவீன ஏவுகணைகள்

எஸ் 400 ரக ஏவுகணைகள் உலக அளவில் அதி நவீனமானவை. 2014-ம் ஆண்டு இந்த ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து சீனா முதன் முதலில் வாங்கியது. அதன் பிறகு இந்த ஏவுகணை வாங்க இந்தியா ஆர்வம் காட்டியது. ஆனால் அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Based on Inputs from Press Information Bureau, The Hindu and Dinamalar.

Picture Courtesy: PIB

Tags
Show More
Back to top button
Close
Close