இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் பட்டியலில் தவிர்க்க முடியாத ஒருவராக கருதப்படுபவர் திரு நம்பி நாராயணன் ஆவார். தமிழகத்தை சேர்ந்த இவர், திரவ எரிபொருளை வைத்து ராக்கெட் ஏவுவதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து வந்தவர்.

கடந்த 1994-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியின் போது வெளிநாடுகளுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ததாக அவர் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டு, மத்தியிலும் கேரளத்திலும் காங்கிரஸ் ஆட்சி தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என சி.பி.ஐ தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பிறகு, தன் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்தது தேவையில்லாதது எனக்கூறி, அவருக்கு கேரள அரசு ₹50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது.

இதனை அடுத்து, இஸ்ரோ வின் மூத்த விஞ்ஞானியான தமிழகத்தை சேர்ந்த திரு நம்பி நாராயணன் கூறுகையில், “எனக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. எனக்கு தெரிந்தது எல்லாம், ₹50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்பதும், நீதி விசாரணை நடத்தப்படும் என்பது தான்”, என்று கூறியிருப்பது நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share