நயன்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் திரைப்படம். இது ஒரு crime thriller வகை திரைப்படம். டிமாண்ட்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார். பிரபல ஹிந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யாப் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். இது போன்ற திரில்லர் வகை திரைப்படங்களில் ரசிகர்கள் கண் இமைக்கவும் முடியாத அளவுக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பது மிகவும் அவசியம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துருவங்கள் 16 என்றொரு திரைப்படம் வெளியானது. அந்த படம் வெளியான சில மாதங்கள் கழித்தே இயக்குனர் திறமையாக நம்மை ஏமாற்றி இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடிந்தது. காரணம் காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம், ஒரு காட்சியை தவற விட்டாலும் கதை புரியாமல் போய்விடுமோ என்கிற அச்சம். இமைக்கா நொடிகள் எப்படி? பார்க்கலாம்.

திரைப்படம், கொடூரமான ஒரு கொலையுடன் தொடங்குகிறது. மின்னல் போல திடீரென அறிமுகமாகிறார் நயன்தாரா. திரையரங்கில் பலத்த கை தட்டல்கள். நயன்தாரா தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார், கதாநாயகன் பெயரை வைத்துத் தான் படத்தை விற்க வேண்டும் என்றோ வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நிலையில் அவர் இல்லை. ஒரு ஸ்டைலான மத்திய புலனாய்வு(CBI) அதிகாரியாக நடித்திருக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார், அதைவிட கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்துகிறார்.

ஒரு போலீஸ் அதிகாரியை பளார் என்று அறையும் காட்சி, ரசிகர்கள் பாஷையில் சொன்னால் ‘மாஸ்’. ஆனால், அது போன்ற காட்சிகள் அதிகமில்லாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. அனுராக் கஷ்யாப் முன்பே குறிப்பிட்டதை போல, மிரட்டி இருக்கிறார். அலட்சியமாக அவர் சிரிப்பதும், அப்படி சிரித்து கொண்டே கொலை செய்வது என அசத்தி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவர் இதைச் சொன்னாலும் நயன்தாரா அப்படியே செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். நயன்தாரா தன்னுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தும் விதமாக ஒரு காட்சியாவது சேர்த்திருக்கலாம். ‘கொஞ்சமாச்சு மூளையை உபயோகப்படுத்தி இருந்தா இந்நேரம் அவனை பிடிச்சிருக்கலாம்’ என்று ஒரு போலீஸ் அதிகாரியை அறைகிறார் நயன்தாரா. அதே கேள்வியை நயன்தாராவிடமும் கேட்கலாம். காரணம், நயன்தாராவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றும் செய்துவிடவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, நயன்தாராவின் தம்பியாக அதர்வா நடித்திருக்கிறார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள், நம்மை வெறுப்பேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சேர்த்திருக்கிறார் இயக்குனர். ஒரு 30-40 நிமிடங்கள், திரைப்படத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத காதல் காட்சிகளை சேர்ப்பது தான் ஏன் என்பதை இயக்குனரிடம் கேட்க வேண்டும். இதில் ‘அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை’ போன்ற ஒரு பாடல் வேறு. ₹155 கொடுத்து தான் படத்தை பார்க்கிறோம். எங்கள் மீது உங்களுக்கு அப்படி என்ன சார் அவ்வளவு கோபம்? அதர்வா தனக்கு கொடுக்கப்பட்டுள்ள காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படத்திற்கு எந்த விதத்திலும் தேவை இல்லை என்பதால், அவர் நடிப்பு எடுபடாமல் போகிறது.

CBI அதிகாரிகள் குழு குழுவாக அங்கும் இங்கும் அலைவதும், கொலைகாரன் எந்த சிரமுமின்றி சுலபமாக தப்பித்துச் செல்வதும், சில நேரங்களில் சிரிப்பையே வரவழைக்கிறது. RD ராஜசேகரின் ஒளிப்பதிவு பிரமாதம். ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் இரண்டு பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது. பின்னணி இசை சுமார் ரகம் தான். ஒரு சில காட்சிகளில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

இவை அனைத்தையும் பொறுத்து கொண்டு, சரி, படம் முடிந்து விட்டது, என்று ஆறுதல் படுத்தி கொள்ளும் பொழுது தான், flashback காட்சிகள் தொடங்குகிறது. அந்த flashback காட்சிகளில் ஒரு ட்விஸ்ட். ஓரளவுக்கு ரசிக்கும்படியான ட்விஸ்ட் (ஓரளவுக்குத் தான்). சரி, படம் முடிந்தது என்று மீண்டும் நினைக்கிறோம், மீண்டும் ஒரு flashback என்று வித்தியாசமாக கடுப்பேற்றுகிறார் இயக்குனர். இந்த முறை flashback காட்சியில் விஜய் சேதுபதி. இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள், 1980-களில் சரத்குமார் நடித்த கதாபாத்திரங்களை நினைவுபடுத்துகிறது. துளி கூட சுவாரஸ்யம் இல்லை.

இப்படி மாவு போல ஒரு திரைக்கதை அமைத்து, இழுத்து இழுத்து, மிகவும் சாதாரணமாக ஊகிக்கக்கூடிய ஒரு கிளைமாக்ஸ் காட்சியோடு படத்தை முடிக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

இது போன்ற திரைப்படம், 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். இன்றைய ரசிகர்களை தூங்கவைக்கிறது.

இமைக்கா நொடிகள் – இழுவை

குறிப்பு : இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும். இந்த கருத்துக்களுக்கு தமிழ் கதிர் ஒருபோதும் பொறுப்பாகாது.

Share