தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் மறைந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்கிற தமிழ் பேரினவாதம் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறந்து கருணாநிதி அரசியல் செயல்படாமல் இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த பேரினவாதம் அதி தீவிரம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களிலும் இது குறித்த கருத்துக்கள் வேகமாக பரவி வருகின்றன. தமிழகத்தில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க நினைக்கும் சில ஊடகங்களும் இந்தப் பேரினவாத கருத்துகளைப் பரப்புவதில் முனைப்பு காட்டுகின்றன. தமிழகத்தில் வலுவாக காலூன்ற, எப்போதும் இல்லாத வகையில் பா.ஜ.க அக்கறை காட்டுவதாக கூறப்படும் நிலையிலும், மற்றும் ரசிகர்கள் மாத்திரமல்லாமல், நடுநிலையாளர்கள் பலரின் மத்தியில் நல்ல மனிதர் என மதிக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் அடி எடுத்துவைத்துள்ள நிலையில் தான் தமிழ்பேரினவாதத்தின் சப்தம் அதிக அளவில் கேட்கத் தொடங்கி உள்ளது.

இந்த பேரினவாத முழக்கம் தமிழகத்துக்கு ஒன்றும் புதியதல்ல. முதலில் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராக இருந்த போதும், அதன் பிறகு திராவிடர் கழக தலைவராக இருந்த போதும் இந்திய தேசிய காங்கிரசின் ஆட்சியை மதராஸ் மாகாணத்திலிருந்து விரட்ட பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்  திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்தார். தொடர்ந்து தி.க-விலிருந்து வெளியேறி தி.மு.க-வை தொடங்கிய அண்ணாதுரையும் தமிழகத்தில் காமராசர் தலைமையில் தொடர்ந்து கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரசை அகற்ற, மாநில சுயாட்சி கோரிக்கையை முன் வைத்தும், தமிழகத்தை டெல்லி ஆளக்கூடாது எனக்கோரியும் தமிழகம் முழுவதும் தங்கள் பேச்சு வன்மையால் அனல் தெறிக்க பிரச்சாரம் செய்தனர்.

ஆனால்,தேசிய உணர்வாலும், காமராசர் மீதிருந்த மக்கள் பற்றாலும் 1957-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தி.மு.க-வால் அகற்ற முடியவில்லை. அப்போது, தி.மு.க-வினர் கிளப்பிய பேரினவாதம் எடுபடவில்லை. ஆனாலும், தி.மு.க-வுக்கு சட்டசபையில் 15 இடங்கள் கிடைத்தன. அப்போது காமராசர் கல்வி, தமிழகத்துக்கான மின் திட்டங்கள், விவசாயக் கட்டமைப்புகளுக்கான நீர்பாசன திட்டங்கள் மற்றும் தொழில் வளர்ச்சி திட்டங்களை செம்மையாக அமல்படுத்தி வந்தார். இந்த நிலையில் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற  சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, தமிழராட்சி  கோஷத்துடன் பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து வந்த தி.மு.க-வுக்கு சட்டசபையில் 50 இடங்கள் கிடைத்தன. ஆனாலும், காங்கிரஸ் ஆட்சியை அகற்ற முடியவில்லை.

தி.மு.க-வின் இந்த வெற்றிக்கு காரணம் தமிழ் பேரினவாத கோஷங்கள் இல்லை என்றும், ராஜாஜியுடன் வைத்த கூட்டணி காரணமாகவே இந்த வெற்றி என்றும் கூறப்பட்டது. இந்த தோல்விக்குப் பிறகு 1967-ஆம் ஆண்டு பொது தேர்தலில், இந்தி எதிர்ப்பு, தமிழ் பேரின வாதம், சீர்திருத்த கருத்துக்கள், மாநில சுயாட்சி கருத்துக்கள் இவை மட்டும் வெற்றி பெற போதாது என நினைத்த தி.மு.க-வினர் தங்களை ஏழைப்பாங்காளர்களாக காட்டிக்கொண்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். தி.மு.க வெற்றி பெற்றால் ரூபாய்க்கு 3 படி அரிசி அளிப்பதாக அண்ணாதுரை தேர்தல் வாக்குறுதி அளித்தார். தேர்தல் பிரச்சார கூட்டங்களில் “ரூபாய்க்கு 3 படி, இல்லையென்றால் முச்சந்தியில் கட்டிவைத்து அடி” என்று அண்ணா முழங்கினார். காமராஜர் நிலையான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினாலும் அடித்தட்டு மக்களின் வாழ்வில் எந்தவித பொருளாதார வளர்ச்சியும் ஏற்படவில்லை என்றும், காங்கிரசில் இருந்த முக்கியப்புள்ளிகளான மிராசுதாரர்களே பயன்களை அதிகம் அனுபவித்தனர் என்றும் தி.மு.க-வினர் செய்த பிரச்சாரத்தை அந்த கடுமையான உணவுப்பஞ்ச நேரத்தில் மக்கள் நம்பத் தொடங்கினர். தி.மு.க-வினரின் தேன் தடவிய பேச்சுக்களில் மயங்கிய வாக்காளர்கள் அந்த மயக்கத்தில் காமராஜரையே மறந்து, அவரைத் தோற்கடித்தது மட்டுமல்லாமல் 138 தொகுதிகளில் தி.மு.க-வினரை வெற்றி பெற வைத்தனர். அண்ணாதுரை முதல்வரானார். இந்த வெற்றிக்குக் காரணம் திராவிடப் பேரின வாதம் எனக் கூறப்பட்டாலும் உண்மையில் அது காரணமன்று. தமிழகத்தில் அப்போது நிலவிய வறட்சியும், உணவுத் தட்டுப்ப்பாடும்தான் காரணம் என்று கூறப்பட்டது.

அடுத்து, அண்ணாவின் எதிர்பாராத மரணத்தால் ஏற்பட்ட அனுதாபம், காமராஜரின் உடல் நலக்குறைவு, புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆரின் தீவிரப் பிரச்சாரம் ஆகிய காரணங்களால் 1971 தேர்தலில் தி.மு.க 180 இடங்கள் பெற்று வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் தி.மு.க-வினர் திராவிடம், தமிழ் பேரினவாதம், இந்தி எதிர்ப்பு எதையும் முன் வைக்காமலேயே சுலபமாக வெற்றி பெற்றனர். எப்போதெல்லாம் தி.மு.க-வினருக்கு, தோல்வி பயம் வருகிறதோ அப்போது மட்டுமே பேரினவாதம் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தி.மு.க ஆட்சியின் மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், கட்சி நிதியில் நடைபெற்ற தில்லு முல்லுகளைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் 1972-ஆம் ஆண்டு தி.மு.க-விலிருந்து வெளியேறி அ.தி.மு.க-வை தொடங்கினார். அதற்கு மக்களிடையே பெருகிய அமோக வரவேற்பைக் கண்ட தி.மு.க மீண்டும் தமிழர் பேரினவாதத்தை கையில் எடுத்தது. ஆனால், இம்முறை திராவிடப் பேரினவாதத்தை கைவிட்டு எம்.ஜி.ஆரை மலையாளி என்றும், தமிழர் அல்லாதவர் என்றும், சினிமா கூத்தாடி என்றும் கேலி பேசி, பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் தி.மு.க முடுக்கிவிட்டது. ஆனாலும், மக்கள் தி.மு.க-வின் பேரினவாதவாத பேச்சுக்களை நிராகரித்து, 1977 பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க-வுக்கு அமோக ஆதரவு அளித்து அவரை முதல்வராக்கினர்.

தொடர்ந்து 1980, 1984-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைக்கான தேர்தல்களிலும் அ.தி.மு.க-வே வென்றது. மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர் குறித்து தி.மு.க-வினர் பரப்பிய எந்த இனவாத விமர்சனமும் எடுபடவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்தை எதிர்த்து அவரை கன்னடர் எனவும், அவர் சார்ந்த பிராமண சாதி குறித்தும் தி.மு.க தீவிர பிரச்சாரம் செய்த போதும், மக்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. 2001-லிருந்து, 2016 பொதுத் தேர்தல் வரை 3 முறை ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அவர் முதல்வராகவே இருந்து மறைந்தார். நாத்திகம் பேசும் திராவிட வெறியர்கள், தனித் தமிழினம் குறித்துப் பேசும் பேரினவாதிகள், தமிழ் இந்துக்கள் மற்றும் இதர மதத்தினரின் நம்பிக்கை போன்றவற்றிற்கு மதிப்பளித்து, அனைவரையும் அமைதியை நோக்கிப் பயணிக்க வைப்பதில் அவர் எம்.ஜி.ஆரின் பாதையை தொடர்ந்து பின் பற்றினார். தற்போது அந்த இடம் அவரது மறைவுக்குப் பிறகு, தொடர்ந்து காலியாகவே உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியலில் தாங்களும் ஒரு அடையாளத்தைப் பெற சில சுயநல சக்திகள் தமிழ் பேரின வாதத்தை கையில் எடுத்து, சமூக ஊடகங்களில் விஷமக் கருத்துக்களை பயன் படுத்தி வருகின்றனர்.

வேலைவாய்ப்பு பெற உரிய வழிகாட்டுதலின்றி பல்வேறு ஆதங்கங்களுடன் உள்ள இளைஞர்கள் இவர்களின் கையில் சிக்கிக்கொண்டுள்ள நிலையில், இவர்களின் கோபம் அனைத்தும் பிரதமர் மோடியை நோக்கி திருப்பி விடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பலருக்கு பா.ஜ.க-வின் ஊழலற்றத்தன்மை, நிர்வாகத்தில் வெளிப்படை அணுகுமுறை, கருப்புப் பணம் சேராமல் தடுக்கும் முயற்சி, பினாமி சொத்துக்கள் கைப்பற்றும் சட்டம், ரியல் எஸ்டேட் சீரமைப்பு, வீடுகள் கட்டவும், வாங்கி கொள்ளவும் குறைந்த வட்டியில் எளிதான முறைகள், சிபாரிசுகள் இல்லாமல் அரசு உதவிகளை தனி நபர் பெறும் முறைகள், நாடு முழுவது நிலவும் சீரான மின் விநியோகம் ஆகியவற்றின் மீது திருப்தியும் நம்பிக்கையும் இருந்தாலும், இன்னும் பல பேருக்கு பா.ஜ.க-வை நேரடியாக ஆதரிப்பதில் அச்சமும் தயக்கமும் உள்ளது. தமிழகத்தில் ஒருபுறம் பா.ஜ.க-வுக்கான ஆதரவு சீராக வளர்ந்து வரும் நிலையில் அந்த கட்சியின் வளர்ச்சிக்கு எதிராக சாதாரண மக்களிடம் பூச்சாண்டி பயத்தையும் பரப்பி வருகின்றனர். பா.ஜ.க வந்தால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள், முதியோர் பென்ஷன் கிடைக்காது, பட்டா இல்லாத இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா தரமாட்டார்கள். அவர்கள் வசிக்கும் வீடுகளை அப்புறப்படுத்துவார்கள், 100 நாள் வேலைத்திட்டம் நின்று விடும், மதச் சண்டைகள் தூண்டப்படும், இட ஒதுக்கீட்டு பலன்கள் கிடைக்காது  என்றெல்லாம் பரப்பி விடப்படும் தவறான பிரச்சாரங்களால் அஞ்சும் தமிழகத்திலுள்ள மக்களுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையில் இடைவெளி உள்ளது என்பதை மறுக்க முடியாது.

இந்த இடைவெளியை சரி செய்ய பொது மக்கள் நம்பும் ஒரு நட்சத்திர மனிதர் நடுநிலையாளராக தேவைப்படுகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம் பலருக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ரஜினி ஒரு யதார்த்தவாதி, நேர்மையானவர், ஆன்மீக விரும்பி, சிறந்த தேசியவாதி என்றாலும் நேரடி அரசியலுக்கு அவர் புதியவர் என்பதால் அவருக்கு ஆதரவு தருவதில் யோசிக்கும் பலரும் உண்டு, என்றாலும், அவருக்குப் பின்னால் பா.ஜ.க இருக்கும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதால் அவருக்கான ஆதரவு பெருகும் என்றே கூறுகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க-வின் வளர்ச்சியின் அடிப்படையிலான திட்டங்களை செயல்படுத்தவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கடை பிடித்த நல்லிணக்க கொள்கைகளுக்கும் ரஜினிகாந்த வடிவமாக இருப்பார் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகின்றது. ஒரு புறம் பா.ஜ.க தமிழர்களுக்கு புதிய அனுபவம்., மற்றொரு புறம் ரஜினிகாந்த் அரசியலுக்கு புதிய அனுபவம். அரசியலில் நேர்மையை விரும்பும் இந்த 2 அனுபவங்களையும் முக்கியமாகக் கொண்டே, மீண்டும் அரசியல் குழப்பங்கள் வராத நிலையில் வரவுள்ள பொது தேர்தல்களின் முடிவுகள் அமைய வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த தேர்தல்களில் மக்கள் பேரினவாத கூச்சல்களை எவ்வாறு ஒதுக்கித் தள்ளினார்களோ அது போலவே இந்த முறையும் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தலைவியை இழந்து தவிக்கும் அ.தி.மு.க-வும் மேற்கண்ட அனுபவங்களுடன் இணைவதன் மூலம் ஆன்மீக, தேசியத்துக்கு எதிரான சக்திகள் தானாகவே ஒடுக்கப்பட்டுவிடும். இதைத்தான் பல தேர்தல்களில் அ.தி.மு.க-வின் அடுக்கடுக்கான வெற்றிக்கு காரணமாக இருந்த தமிழக நலன் சார்ந்த தேசியவாதிகள் விரும்புகிறார்கள்.

*இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும். இந்த கருத்துக்களுக்கு தமிழ் கதிர் ஒருபோதும் பொறுப்பாகாது.

Share