எத்தனால், உயிரி எரிவாயு ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்குப் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் இறக்குமதி குறைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உயிரி எரிபொருள்களை நாட்டில் ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2009ம் ஆண்டு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் தேசிய உயிரி எரிபொருள் கொள்கை உருவாக்கப்பட்ட்து. உலகம் முழுவதும் உயிரி எரிபொருள் மீதான கவனம் கடந்த பத்தாண்டுகளில் ஈர்க்கப்பட்ட்து. இந்தியாவில் உயிரி எரிபொருள் மீதான கவனம் ஒரு முக்கியமான யுக்தியாக கருதப்படுகிறது. அரசின் இந்தியாவில் தயாரிப்போம், தூய்மை இந்தியா இயக்கம், திறன் மேம்பாடு முயற்சிகளுக்கு இது ஊக்கம் அளிப்பதுடன், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் அரசின் முயற்சிக்கும் உதவியாக இருக்கிறது. இறக்குமதியை குறைத்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம், கழிவிலிருந்து சொத்து உருவாக்குதல் இதன் மூலம் சாத்தியமாகிறது. இந்தியாவில் உயிரி எரிபொருள் திட்டம் உள்நாட்டு உற்பத்தியில் போதிய கவனமின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அதன் மீது உரிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த நிலையில், உலக உயிரி எரிபொருள் நாளையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, 2022ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 10விழுக்காடு எத்தனால் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் என்றும், 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பண்ணைக் கழிவுகள் அனைத்தையும் எரிபொருளாகப் பயன்படுத்துவதால் கழிவுகள் வீணாவது தடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்கவும், எத்தனால் மூலம் உயிரி எரிபொருள் தயாரிக்கவும் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12ஆலைகள் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் ஆண்டுக்குப் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய், எரிவாயு இறக்குமதியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மே 16  அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை உயிரி எரிபொருள் 2018க்கான தேசிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Share