கொள்கை ரீதியாக இரு துருவங்களாக திகழும் கட்சிகள் தி.மு.க-வும், பா.ஜ.க-வும். கடவுள் மறுப்பு கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கும் கட்சி தி.மு.க. தற்போது கடவுள் மறுப்பு கொள்கைகள் தி.மு.க-வில் தளர்த்தப்பட்டு வருவதாக கருத்துகள் நிலவினாலும், அத்தகைய கொள்கைகளுக்கு நேர் மாறான கொள்கைகளை கொண்ட கட்சி பா.ஜ.க.  கட்சி துவங்கிய நாள் முதல் இந்துத்துவ கொள்கைகளில் தீவிரமாக இருக்கிறது பா.ஜ.க. இருந்தாலும் இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, மத்தியில் பா.ஜ.க-வுடன் தி.மு.க-வை அமைச்சரவையில் பங்குபெற வைத்த சாணக்கிய தனம் கொண்டவர் கலைஞர் கருணாநிதி.

1996-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த செல்வி.ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, 1998 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, பா.ம.க, ம.தி.மு.க-வுடன் ஒரு புதிய கூட்டணியை அறிவித்தது. இது தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் பா.ஜ.க-வுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை கூட்டணி அமைக்கத் தயங்கிய கட்சிகள் எல்லாம் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கத் துணிந்தன. பா.ஜ.க-வுடன் கூட்டணி என்ற ஜெயலலிதாவின் அந்த முடிவு, 1998-ல் 20-க்கும் அதிகமான சிறிய கட்சிகளை இணைத்து வாஜ்பாய் ஆட்சி அமைக்க வழி வகுத்தது.

ஆனால் செல்வி.ஜெயலலிதா மீதான வருமான வரி சம்பந்தப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வாஜ்பாய் அவர்கள் நிராகரித்தாக கூறப்படுகிறது. பிறகு, பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு கூட்டணி உடைந்தது. செல்வி.ஜெயலலிதா மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் கலந்து கொண்ட ஒரு தேனீர் சந்திப்பு வாஜ்பாயியின் அரசை கவிழ்தது.

பிறகு, வாஜ்பாயின் மிகுந்த நம்பிக்கையை பெற்ற பிரமோத் மகாஜன் அவர்கள், தி.மு.க.வுடன் கூட்டணி என்ற கருத்தை முன்னெடுத்து வந்தார். பா.ஜ.க-வில் பலர் அது சாத்தியமில்லை என்று எடுத்துரைத்தனர். தி.மு.க. ஒரு நாத்திக கட்சியாகவும், பிராமணர்களுக்கு எதிரான கட்சியாகவும் கருதப்பட்டது. ப்ரமோத் மகாஜன் மற்றும் முரசொலி மாறன் இடையே முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடந்தது. இரு கட்சிகளும் ஒன்றிணைந்தன. 1999-ஆம் ஆண்டு தி.மு.க கூட்டணியுடன் வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தார். முரசொலி மாறனுக்கு வர்த்தக அமைச்சகம் வழங்கப்பட்டது. டி.ஆர்.பாலுவுக்கும், ஆ.ராசவுக்கும் அமைச்சர் பதவி கிடைத்தது.

தி.மு.க. மற்றும் பா.ஜ.க இடையேயான உறவு சீராக இருந்தது. மாறன் வாஜ்பாயியுடன் நெருக்கமாக இருந்து வந்தார். மேலும் மகாஜனுடன் நல்ல உறவு வைத்திருந்தார். 2002-ஆம் ஆண்டில் முரசொலி மாறன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். கோமா நிலையில் இருந்த போதிலும் கூட மாறன் அமைச்சராக இருந்தார். அவர் 2003-ஆம் ஆண்டு நவம்பரில் இறந்தார். வாஜ்பாயி அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு அனைத்து ராணுவ மரியதைகளும் தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு செய்துள்ளது. கலைஞர் கருணாநிதி தற்போது முதல்வராக இல்லாத நிலையில், மத்திய அரசு துக்கம் அனுசரித்து, அனைத்து மாநில அரசுகளையும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்க அறிவுறுத்தியது. மாநிலங்கலவையின் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு, இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. கலைஞரின் உடல் மீது தேசிய கொடி வைக்கப்பட்டது. முப்படையினரின் மரியாதை அளிக்கப்பட்டது. 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கொள்கைகளில் வேறுபாடு இருந்தாலும் அரசியல் நாகிரகமும், மனிதாபமானமும் இரு கட்சிகளும் பேணிக்காத்துள்ளன.

SG Suryah is an Advocate practising in the High Court of Madras & Company Secretary by profession. Currently he is the Vice President of BJYM (BJP Youth Wing) of Tamil Nadu.

Share