File Image

மேட்டூர் அணை முழுக்கொள்ளளவான 120 அடியை 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது எட்டியுள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

 

39வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. காலையில் பாசனத்திற்காக 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், 12 மணிக்கு மேல் 30,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

 

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும், அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் எந்நேரமும் மீட்புப் பணிகளுக்கு தயாராக இருக்கும்படி உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் போலீஸார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத் துறையினர் காவிரி கரையோர கிராமங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி கரையோரங்களில் வசித்து வந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Share